Sunday, August 14, 2005

மேதமை அரசியல்....


இளையராசா என்னும் இசைமேதையை வைத்து ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. எவன் கை எவன் முதுகை குத்துகின்றது அல்லது எவன் முதுகு எவன் கையை குத்து கின்றது எனப் புரியாமல் ஒரு கிச்சு கிச்சுத் தாம்பாளம். ஞாநி, சாரு , அவுட்லுக் ஆனாந்த், 10ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல முனையும் "பெரியாரி"ஸ்டுகள் (யாருப்பா நீங்கள் எல்லாம்?) ஒரு பக்கமும் , கலக விரும்பி ( நன்றி பத்ரி அவர்களே) ரோசாவசந்த் மறுபக்கமும் மற்றும் ஒத்துக்கு கூடவே "இசை" ரசிகர்கள், "இசை அரசியல்" ரசிகர்கள் மற்றும் வழக்கமான "பூணூல்" ரசிகர்கள்.

சரி சண்டை தான் என்ன என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முனைந்தாலோ தலைச் சுற்றுகின்றது. இளையராசாவின் இசை மேதமையை ஞாநி, சாரு மற்றும் 10ஆம் நூற்றாண்டு பெருவியாதிஸ்டுகள் "மதிக்காமல்" அவரது அரசியல்/சமூக நிலைப்பாட்டை கற்பனை செய்து குற்றம் சாட்டுவதாக ரோசாவின் "கலகம்" என நினைக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. இப்போதைக்கு இந்த "மேதமை" என்ற விடயத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்த ஆசை

அது என்ன மேதமை? தலித் சமூகமோ அல்லது அதைப் போன்ற ஆனால் வெவ்வேறு அளவுகளில் அச்சுறுத்தல்களுக்கும்/சுரண்டல்களுக்கும்/வன்முறைகளுக்கும் உள்ளான வேறு சமுகங்களோ, பாலினங்களோ , இந்த "மேதமை" என்ற யாரோ நிர்ணயித்த அளவுகோளினைத் தாண்டிய ஆளுமைகளை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏதேனும் உள்ளதா என்பதே என் முன்னால் உள்ள கேள்வி. சில மாதங்களுக்கு முன் வலைப்பதிவில், இன்று ரோசாவசந்துடன் சேர்ந்து கலகப் போர் தொடுத்திருக்கும் அருள் என்பவரின் பதிவில் ஒரு வர்ணச்சித்திரம். ஊர்க் குருவியின் அருகில் அமர்ந்து ஒரு பருந்து சொல்கின்றது "உயர உயரப்" பறந்து நான் பருந்தாகிவிட்டேன் என்று. நந்தலாலா என்பவர் கமெண்ட்டைப் படித்தால், இளையராஜாவும் மனது வந்து சமூகத்தினரை நேருக்கு நேர் பார்த்து கருத்து சொல்லும் பாக்கியம் வந்தால் உதிர்ப்பதும் "இதைப்" போல் இருக்கக் கூடும் என்று தெரிகின்றது. "இதைப்" போன்ற "வன்"முறையை, அது விளைவிக்கும் பாதிப்பை, ஒரு "ஒரிஜினல்" பருந்தும் "ஊர்"குருவிக்கு செய்து விட முடியாது.

அது போகட்டும், மூளையின் மடிப்புகளில் சில அதிக மடிப்புகளை இயற்கையின் சோழி உருட்டல் விளையாட்டில் பெற்றுவிட்ட தன்மையினாலே வரும் "அதி" மனித தீரங்களுக்கு எந்தளவு அவசியம் மற்றும் தேவையும் கூட? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் இதயத்தின் அளவைவிட சற்று அளவு பெரிதான ஒன்று அமைந்து போனதாலே விளையாட்டுத்தளத்தில் எல்லோரும் தளரும் நேரத்தில் தளர்ச்சி காட்டாமல் ஒருவர் விளையாடி வெற்றி பெருவதோ அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட முலைக் காம்பினைப் பெற்றிருப்பதாலே சர்க்கஸில் வந்து பார்வையாளர்களை கிளுகிளுப்பாக்குபவரோ அல்லது அதிவேகமான மற்றும் ஏரானமுறையில் சிந்தித்து செஸ் விளையாட்டில் பத்து ஆட்ட முறைகளுக்கு பிந்திய சாத்தியக் கூற்றை மனதில் படம் பிடித்து வெற்றி பெருகின்றவரோ, இவர்களுக்கிடையில் மிக அடிப்படையில் என்ன வித்தியாசம்? கூடவே விஞ்ஞானம் அஞ்ஞானம் மற்றும் கலை இலக்கிய வீர தீர தனி மனித "சாதனை"யாளர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு சமூகம் கடமை பெற்றிருக்கின்றது என்பதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி?

அனாதை.

4 comments:

இளங்கோ-டிசே said...

//அது என்ன மேதமை? தலித் சமூகமோ அல்லது அதைப் போன்ற ஆனால் வெவ்வேறு அளவுகளில் அச்சுறுத்தல்களுக்கும்/சுரண்டல்களுக்கும்/வன்முறைகளுக்கும் உள்ளான வேறு சமுகங்களோ, பாலினங்களோ , இந்த "மேதமை" என்ற யாரோ நிர்ணயித்த அளவுகோளினைத் தாண்டிய ஆளுமைகளை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏதேனும் உள்ளதா என்பதே என் முன்னால் உள்ள கேள்வி//
ஆனந்தன், நல்லதொரு கேள்வி. இந்தக்கேள்வி எனக்கும் சிலவேளைகளில் தோன்றியிருக்கின்றது (பாரதி ஏன் தன்னை ஒரு தலித்தாக பிரகடனப்படுத்தாமல், தலித் பிள்ளைகளுக்கு பூணூல் மட்டும் போட்டவர் என்று யோசித்தால் அங்கேயும் தலித்தாய் இருப்பது தவறு, பிராமணராய் இருப்பதுதான் சிறந்தது என்று ஒரு 'மேதமை/மேட்டிமை' தன்மை வெளிப்படுகிறது என்றுதான் புரிந்து வைத்திருக்கின்றேன்).
இளையராஜாவின் திருவாசகத்துக்கு அவரவர் அவரவர்க்கான நியாயங்களை/வாசிப்புக்களை வைத்திருப்பதை வாசித்துக்கொண்டிருக்கின்றேன், வலைப்பதிவுகளிலும் ஏனைய அச்சு ஊடகங்களில் வந்ததையும் (இன்று வாங்கிய 'உயிர்மை'யிலும் சுரேஷ் கண்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். இங்கே வலைப்பதிவில் எழுதும் சுரேஷ் கண்ணனும் அவரும் ஒருவரா என்று தெரியவில்லை)தவறவிடாது வாசித்தபடியேதான் இருக்கின்றேன். இதுவரை இளையராஜாவின் திருவாசகத்துக்கு எழுதப்பட்ட எந்தப்பதிவுக்கும் பின்னூட்டம் எழுதியதில்லை என்பது ஒருபுறம் இருக்க, இந்த விடயம் ஒருவித extaggerated செய்யப்பட்டு செய்யப்பட்டு எரிச்சலே இந்தப்பொழுதில் மிஞ்சுகின்றது என்பதே உண்மை.

ROSAVASANTH said...

சில வரிகள், உதாரணமாய் "இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. ", புரியவில்லை

ஆனால் 'மேதமை' என்று கேட்கும் கேள்விகுறித்து சில கருத்துக்கள், இதே கேள்விகளை கேட்டு இப்போதைக்கு வந்தடைந்த வகையில் எனக்கு உண்டு. முடிந்தால் சில நாட்களில்..

ஆனால் டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் குசுவிடுவார் என்று எண்ணுவது போல், நான் எழுதுவதெல்லாம் கலகம் என்று பார்க்கவோ, ஒப்புதல் உள்ளவரையும் அதில் சேர்கவோ என்ன காரணம் என்று புரியவில்லை. 'குட்டி பூர்ஷ்வாவின் கலகம்' என்பது நிலப்பிரபுத்துவ ஜனநாயகம் என்று சொல்வது போல ஒரு oxymoran. தன்னையே செய்துகொள்ளும் சுய எள்ளல். அது புரியாமல் ஊரில் அவனவன் நான் 'கலகம்' செய்வதாக புரிந்து கொண்டிருந்தால், அது குறித்து உங்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் விளக்கிய பின்னுமா? சுய எள்ளலை விளக்குவது போன்ற அபத்தம் கிடையாது. இப்படி ஆபத்தாக புரிந்துகொள்ளப் படுவதால் சொல்ல வேண்டி வருகிறது.

மற்றபடி உங்கள் எதிர்வினைக்கு நன்றி. முடிந்தால் என் கருத்துக்கள் சில பின்னர் என் பதிவில்.

அனாதை ஆனந்தன் said...

டீசே,

பாரதி சக பார்ப்பனர்களின் மீது கோபம் கொண்டு பூணுலுக்கு மதிப்பில்லை என்று தன்னுடையதை அவிழ்த்தெரிந்த காலகட்டத்தில் தான் தலித்திற்கு பூணுல் அனுபவித்தார். ஆனால் ஒன்றற கவனித்தில் வைக்க வேண்டும். அந்த கால கட்டம் மற்றும் பாரதியின் வயது.

ரோசாவசந்த்,

அசோகமித்ரன், ஜெயகாந்தன் மற்றும் இளையராஜா மூவருமே சனாதனிகள் வருணாசிரமத்தை உள்வாங்கியவர்கள். இந்த மூவரில் இளையராஜா உள் வாங்கிய வருணாசிரம் தான் என்னை மிகவும் பாதித்தது. நீங்கள் சொல்வது போல் "என்" சட்டகத்திற்குள் வராத இளையராஜா மேல் கோபம் தான் வருத்தம் தான். அதைச் சொல்வதில் எந்த கூச்ச நாச்சமும் கிடையாது. அசோகமித்ரனோ அல்லது ஜெயகாந்தனோ வாயைத் திறப்பதில் எனக்குள் எந்த அதிர்வும் இல்லை. மனதாரச் சொன்னால் மகிழ்வுதான். ஆனால் இளயராஜா அப்படி இல்லை. இது வேறு. ஆனால் தாங்கள் காட்டும்/எதிர் கொள்ளும் முறையோ தலைகீழாக இருந்தது. அதை எப்படி அர்த்தப் படுத்திக்கொள்வது என்பதற்கு என் சமாதானமாக சொன்னது தான் தங்களுக்கு புரியவில்லையாகி விட்டது. இனி "கலகம்" பற்றி - அந்தக் "கலக விரும்பி" உங்களது பதிவு விளக்கவுரையில் இருந்து எடுக்கவில்லை எடுத்தது திரு பத்ரியிடமிருந்து. எடுதது ஒரு நகைமுரனுக்காக - வழைமையான "கலக விரும்பி"கள் சனாதன முகச்சுளிப்பை நோக்கி செயல்படுவார்கள். இங்கு நடந்ததோ ஒர் சனாதனிக்கு நடந்த சப்பைக்கட்டு. "வேறெங்கோ" நடந்த விசிலடுப்புகளை கிண்டலித்த உங்கள் பின்னுரையில் நடக்கும் சனாதன விசிலடிப்புகளை கோடி காட்ட போட்ட முரண் அது.

நன்றி,
அனாதை.

ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி.