Thursday, November 11, 2004

தோழர் அராஃபத்!


பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாஸர் அராஃபத் சற்று முன் இறந்ததாக அதிகாரபூர்வமாய் அறிவிக்கபட்டுள்ளது. எந்தவித இரக்கத்திற்கும் இடமளிக்காத மிக மூர்கமான அரசவன்முறைக்கு சரியான உதாரணமாய் திகழும் இஸ்ரேலின் 50 ஆண்டுகால bruttal ஆக்ரமிப்பு, படுகொலைகள், சதிகளை எதிர்த்து போராடிய ஒரு சகாப்தம் முடிவுற்றுள்ளது. அராபத் என்ற மனிதன் இல்லாமலிருந்தால் பாலஸ்தீன விடுதலை போராட்டம் இத்தகைய ஒரு எழுச்சியை அடைந்திருக்காது, அல்லது திசை திரும்பியிருக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லையற்ற அதிகாரத்திலிருந்து பிறக்கும் வன்முறையை எதிர்க்க உந்துதலாய் என்றென்றும் இருக்க போகும் தோழருக்கு எனது அஞ்சலிகள்.

தனது பிந்தய காலகட்டத்தில் அராஃபத் பல சமரசங்களை ஏற்றுகொள்ளவேண்டியிருந்தது. கையாலாகாமல் வாளாவிருக்க நேர்ந்தது.(எட்வர்டு சையத்தால் மிகவும் இதற்காக எதிர்க்கபட்டார்.) இவை, எத்தகைய போர்குணம் கொண்டவரானாலும் அரசு மற்றும் (ஏகதிபத்திய சார்) உலக அமைப்புகள் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தை, சமாதான முயற்சிகள் இவைகளில் பங்கு கொண்டால் எப்படியெல்லாம் சொதப்ப நேரிடும் என்பதற்கான உதாரணங்கள். அரஃபத்தின் அரசே(மற்றும் பாதுகாப்பு படையினர்) ஊழல்-முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றசாட்டுகளும் உண்டு. அரசு என்ற நிறுவனத்தினுள் நுழைந்தபின் யாரும் கறைபடாமல் இருக்க முடியாது என்பதற்கான இன்னொரு உதாரணம் இது(மண்டேலாவே விதிவிலக்கில்லாமல் போனபின்).

வறலாற்றின் விகாரமான வக்ரங்களில் ஒன்றாக இஸ்ரேல் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இனவாதத்தினால் தங்கள் மீது நிகழ்த்தபட்ட பெரும் இன அழிப்பால் பாதிக்கபட்ட ஒரு இனம், அதே போன்ற ஒரு கொடுமையான வன்முறையை இன்னொரு இனத்தின் மீது 50 ஆண்டுகளாக பிரயோகித்து வருவது போன்றதொரு வக்ரம் வேறு இருக்கமுடியாது. இஸ்ரேல் என்ற ஒரு அரசு நிறுவனம் அப்படி இருப்பதில் ஆச்சரியப்பட அதிகமில்லை. ஆனால் உலகமெல்லாம் உள்ள யூதர்கள்(எண்ணிவிடக் கூடிய சிலரை தவிர) அதற்கு ஆதரவாகவும்,. அதை நியாயபடுத்துவதும் தான் மிக பெரிய வக்ரமாய் தெரிகிறது. அதிலும் முக்கியமாக தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பை, இன்றய தங்கள் ஆக்ரமிப்பிற்கான நியாயங்களில் ஒன்றாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பிரசாரம் செய்து வருவதும், பாலஸ்தீன சார்பாய் பேசுபவர்களை யூத வெறுப்பாளர்களாய் முத்திரை குத்துவதும் தான் வக்ரத்தின் உச்சமாய் தெரிகிறது. தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பிலிருந்து இதைதான் கற்றுகொண்டார்கள் என்றபோது மானுட சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து உற்சாகம் கொள்ள எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அராஃபத்தின் இறப்பு நிலமையை எங்கு இட்டுசெல்லும் என்று தெரியவில்லை. நிச்சயமாய் இதையும் இஸ்ரேல் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்ளும் என்பது மட்டும் புரிகிறது.

--ரோஸாவசந்த்.

மேலும் படிக்க