Saturday, January 24, 2009

உச்ச நீதிமன்றக் கதை .....

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆயுட்கால நியமனம் என்பதால் அவர்களது பாதிப்பு அமெரிக்க அரசியலில் அதிகம் ஆனால் அமெரிக்க அதிபர்கள் போல் பூமாலையோ , கல்லடியோ பெறுவதில்லை. அமெரிக்க அரசியல் வழிமுறைகளில் என்னால் ஆழ்மனதளவில் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று இந்த ஆயுட்கால நியமனம். ஜான் ஆடம்ஸ் நியமனம் செய்த ஜான் மார்ஷல், அமெரிக்க நீதித்துறையிலும் அதன் பின் விளைவாக அமெரிக்க அரசியல் அரங்கில் விளைந்த மாற்றங்கள், ஜான் ஆடம்ஸ் மற்றும் அவரது அரசியல் எதிர் தாமஸ் ஜ்ஃபர்சன் அரசியல் அரங்கில் செய்ய முனைந்த மாற்றங்களை விட பாதித்தவைகள். ஆனால் உலகுக்கு ஆடம்ஸையும் ஜ்ஃபர்சனையும் தெரிந்த அளவுக்கு ஜான் மார்ஷலை தெரியாது. ஜான் மார்ஷல் மிகக் குறைந்த வயதில் நியமனம் ஆனாதால் மிக நீண்ட நாட்கள் பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்து குறைந்த வயதில் நியமனம் ஆனவர், தற்போதய முதன்மை உச்ச நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். அவரை நியமித்தது ஜார்ஜ் புஷ். ஜார்ஜ் புஷ் செய்த பல முட்டாள்தனங்களை, பராக் ஒபாமா மாற்றி எழுதிவிட முடியும் , ஆனால் ஜான் ராபர்ட்ஸ்சை ஒன்றும் செய்ய முடியாது. அவர் குறைந்த அளவில் 2030 வரை இதே பதவில் இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. பொதுவாக சுப்ரீம் கோர்ட் அதனது முதன்மை நீதிபதியின் பெயரினாலே குறிக்கப்படும். மார்ஷல் கோர்ட், டானரி கோர்ட், வாரன் கோர்ட், ராபர்ட்ஸ் கோர்ட் என்று. அமெரிக்க அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்தது , சில குறிப்பிட்டு சொல்லக் கூடிய கோர்ட்களினால் தான். கோர்ட்களின் உட்கோட்டமைப்ப்பை அமைப்பது அதிபர்களின் பங்கு. ரீகனும், புஷ்சும்(இரண்டும்) தற்போதைய கோர்ட்டின் உள்மைப்பை பழமைவாதிகள் கை ஓங்குமாறு செய்திருந்தார்கள். ரீகன் நியமனங்கள் முக்கியமாக சாண்ட்ரா ஒ கானர், 2000 தேர்தலை மக்கள் ஓட்டை எதிராளியை விட குறைவாக பெற்றிருந்தாலும் புஷ்ஷை அதிபராக நியமிக்க உதவியாக இருந்தது என ஒரு அரசியல் விவாதம் சொல்லும்.

நாம் அடுத்து பார்க்கப் போவது டானரி கோர்ட். மார்ஷலுக்கு அடுத்து முதன்மை நீதிபதியாக வந்தவர் தான் டானரி. மார்ஷலைப் போலவே, டானரி , அதிபர் அண்ட்ரூ ஜாக்சன் அமைச்சகத்தில் இருந்தவர். நீதித்துறை செயலராக இருந்தவர். அண்ட்ரூ ஜாக்சனின் கொள்கைகளை தொல்லையின்றி கொண்டு செல்ல முதன்மை நீதிபதியாக நியமிக்கப் பட்டவர். அண்ட்ரூ ஜாக்சன் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் படிக்க அறிந்து கொள்ள சுவாரசியமான ஒன்று

டானரி கோர்ட் காலகட்டத்தில் அமெரிக்க பலத்த மாற்றங்களை அடைந்து கொண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும் வளர்ந்து கொண்டிருந்தது. அதே சமயம் அடிமை மறுப்பு விவாதம், அனைவருக்குமான உரிமை என்ன்னும் கொள்கை வடபகுதி மக்களின் ஆதார பிரச்சனையாக வளர்ந்து கோண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும், தென்பகுதி அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. அந்த வளர்ச்சிக்கு அடிமை முறை மிகுந்த ஆதாரவாக இருந்ததை யாரும் உணரலாம் அந்த வகையில் அடிமை முறை வேண்டும் என்பது தென்பகுதி அமெரிக்க மக்களைன் வாழ்வாதரவான பிரச்சனையாக இருந்தது.

ஆண்ட்ரூ ஜாக்சனும், டானரியும், பொருளாதார விடயங்களில் தலையிடாமை (அது எந்தளவிற்கு பொது அறத்திற்கு பாதகமாக இருந்தாலும் அதே சமயம் அமெரிக்க அடிப்படைச் சட்டங்களை மீறாமல் இருக்கும் வரை) எனக் கொண்டிருந்தனர். அமெரிக்க சட்டங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உரிமை என கொடுத்து இருந்தாலும், அடிமைகள் மனிதனே இல்லை ஆகவே உரிமை ஏதும் இல்லை என்னும் நீதி ஓடிக் கொண்டிருந்து. இந்தக் கொள்கைப் போராட்டங்கள் தான் பின்னால் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தன.

இந்த அடிமைகள் முழு மனிதனே இல்லை என பார்க்க எப்படி அமெரிக்க சட்டம் வழிதருகிறது என்பது கொடுமைதான் என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்க கூட்டாட்சியினை நிலை நாட்ட வடக்கு மற்றும் தென் மாநிலங்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்தன். அடிமைகளை எப்படி கணக்கிடுவது என ஒரு முக்கியமான பிரச்சனை. அடிமைகளை பொருளாக கணித்தால், தென் மாநிலங்களின் மக்கள் விகிதார அளவு பாதிக்கும், முழு ஆளாக கணித்தால், வரி கணக்கிடுவதில் பாதிப்பு. ஆகவே அடிமைகள் 3 ல் 5 அளவுக்கு மனிதர்கள் என முடிவு செய்து அதை அடிப்படை சட்ட ஆதாரங்களில் எழுதி விட்டனர், அடிமை மறுப்பாளர்களின் எவ்வளவோ எதிர்ப்பையும் மீறி. அந்த விதியைக் காரணம் காட்டியே அடிமைகளுக்கான தனிமனித உரிமைகளை தடுத்து வந்தனர். அந்தக் காலகட்டங்களில் வடக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றாக அடிமை வைத்துக் கொள்வதை தடை செய்ய ஆரம்பித்து இருந்தனர். அமெரிக்க அடிப்படைச் சட்டங்களில், தப்பித்துப் போகும் அடிமையினை, திரும்ப முதலாளி எடுத்துக் கொள்ளும் உரிமையும் இருந்தது. ஆனாலும் அடிமை மறுப்பைச் சட்டமாக எடுத்திருந்த வட மாநிலங்கள், அந்த உரிமையை நிலை நாட்டவில்லை. பென்சில்வேனியா மாநிலம் அந்த வகையில் எட்வர்ட் ப்ரிக்ஸ் என்பவனை அவன் அடிமையை திரும்ப பிடிக்கமுயன்றதற்காக கைது செய்து இருந்தது. அந்த வழக்கு உச்சநீதி மன்றத்துக்கு சென்ற போது டானரி கோர்ட் அவனை விடுதலை செய்தது. இது நடந்தது 1840 களில்.

இதற்கு முன்னதாக 1820ல் வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கும் அடிமை நிலையை முன்வைத்து மக்கள் மன்றத்தில் மேலும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது மிசௌரி மாநிலத்திற்கு வடக்கு மற்றும் கிழக்காக இருக்கும் பிரதேசங்களில் அடிமைகள் வைத்துக் கொள்வதற்கு முழுத் தடையும் அதற்கு கீழ் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களில் எடுக்கும் முடிவும் இருக்கும் என்பது தான் அந்த மக்கள் மன்றத்தின் ஒப்பந்தம். அது மன்றத்தின் சட்டபிரயோகமாக வந்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தை சோதிக்கும் வகையில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. டிரெட் ஸ்காட் என்னும் அடிமை மிசௌரி மாநிலத்தில் இருந்தார். அவரை அவரது முதலாளி, இலியனாய்ஸ் மாநிலத்திற்கும் அதன் பிறகு மினசோட்டா மாநிலத்திற்கும் "எடுத்து"ச் சென்றிருந்தான். அந்த இரண்டு மாநிலங்களும் அடிமை மறுப்பு மாநிலங்கள். பின் அவர்கள் மிசௌரி மாநிலத்திற்கு திரும்பினர். ட்ரெட் ஸ்காட் இப்பொழுது தனது விடுதலைக்காக 1857ல் ஒரு வழக்கு தொடுத்தார். அதற்கு இலியனாய்ஸ் மாநிலத்து அடிப்படைச் சட்டத்தையும், 1820 வந்திருந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகத்தையும் ஆதரவாக வைத்திருந்தார். மிசௌரியில் இழந்து, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது உச்ச நீதிமன்றத்தில் 4 அடிமைமறுப்பு சார்பு இருந்த நீதிபதிகளும், 5 அடிமை வைப்பு சார்பு (டானரியையும் சேர்த்து). பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து நீதியுடன் கருத்தினையும் சொல்வார்கள். அதில் ஒத்துக் கொள்ளாதவர்கள் எதிர்வாதமாக தங்களது கருத்தினையும் வைப்பார்கள். இந்த வழக்கில் அனைத்து 9 நீதிபதிகளிம் கருத்து சொல்லியிருந்தார்கள். டானரியையும் சேர்த்து. டானரியின் கருத்து பெரும்பான்மையினரின் கருத்தாக கருதப்பட்டது. கிழடாகியிருந்த டானரி, அடிமை விடயத்தில் முற்றுப் புள்ளி வைத்து விடுவது என முடிவு எடுப்பது போல் அவரது கருத்து இருந்தது இவ்வாறாக ,

1820ல் வந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகம் அடிப்படைச் சட்டத்தை மீறியது ஆதலால் செல்லாது. அடிமைகள், அடிப்படைச் சட்டமியற்றிய காலத்தில் "வென்ற" வெள்ளை இனத்திற்கு கீழ் இருக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்தவித உரிமையும், விடுதலை பெறும் உரிமையும் சேர்த்து, கிடையாது. தனிமனித உரிமைகளில் பொருளுடைமையையும் காக்க அடிப்படைச் சட்டம் இருப்பதால், அடிமைகள் பொருளுடமைக்குள் வருவதால், அவர்களை விடுவிக்க எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது

இந்தச் சட்டம் வெளிவந்த பிறகு அடிமை மறுப்பாளர்கள் எதிர்ப்பு அதிகமாக, அடிப்படைச் சட்டங்களைப் பற்றிய நம்பிக்கை கிழே இறங்கியது. வடக்கு தெற்கு பிரிவினை உச்சத்திற்கு வந்தது. இன்னமும் இந்த வழக்கும், இந்த வழக்கின் முடிவும் அமெரிக்காவிற்கு அவமானம் தரக்கூடிய வழக்காக இருந்து வருகின்றது. அதனாலேயே கீழ் வரும் படத்தின் பின் இருக்கும் உணர்வு (symbolism) பலமாக பேசப்பட்டது. கீழே இருக்கும் படம் மிசௌரியில் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்கப் பட்டது. பின்னால் தெரியும் கட்டடத்தில் தான் முதலில் டிரெட் ஸ்காட்டின் வழக்கு நிராகரிக்கப் பட்டது.






தொடரலாம்

மேலும் படிக்க