மேதமை அரசியல்....
இளையராசா என்னும் இசைமேதையை வைத்து ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. எவன் கை எவன் முதுகை குத்துகின்றது அல்லது எவன் முதுகு எவன் கையை குத்து கின்றது எனப் புரியாமல் ஒரு கிச்சு கிச்சுத் தாம்பாளம். ஞாநி, சாரு , அவுட்லுக் ஆனாந்த், 10ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல முனையும் "பெரியாரி"ஸ்டுகள் (யாருப்பா நீங்கள் எல்லாம்?) ஒரு பக்கமும் , கலக விரும்பி ( நன்றி பத்ரி அவர்களே) ரோசாவசந்த் மறுபக்கமும் மற்றும் ஒத்துக்கு கூடவே "இசை" ரசிகர்கள், "இசை அரசியல்" ரசிகர்கள் மற்றும் வழக்கமான "பூணூல்" ரசிகர்கள்.
சரி சண்டை தான் என்ன என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முனைந்தாலோ தலைச் சுற்றுகின்றது. இளையராசாவின் இசை மேதமையை ஞாநி, சாரு மற்றும் 10ஆம் நூற்றாண்டு பெருவியாதிஸ்டுகள் "மதிக்காமல்" அவரது அரசியல்/சமூக நிலைப்பாட்டை கற்பனை செய்து குற்றம் சாட்டுவதாக ரோசாவின் "கலகம்" என நினைக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. இப்போதைக்கு இந்த "மேதமை" என்ற விடயத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்த ஆசை
அது என்ன மேதமை? தலித் சமூகமோ அல்லது அதைப் போன்ற ஆனால் வெவ்வேறு அளவுகளில் அச்சுறுத்தல்களுக்கும்/சுரண்டல்களுக்கும்/வன்முறைகளுக்கும் உள்ளான வேறு சமுகங்களோ, பாலினங்களோ , இந்த "மேதமை" என்ற யாரோ நிர்ணயித்த அளவுகோளினைத் தாண்டிய ஆளுமைகளை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏதேனும் உள்ளதா என்பதே என் முன்னால் உள்ள கேள்வி. சில மாதங்களுக்கு முன் வலைப்பதிவில், இன்று ரோசாவசந்துடன் சேர்ந்து கலகப் போர் தொடுத்திருக்கும் அருள் என்பவரின் பதிவில் ஒரு வர்ணச்சித்திரம். ஊர்க் குருவியின் அருகில் அமர்ந்து ஒரு பருந்து சொல்கின்றது "உயர உயரப்" பறந்து நான் பருந்தாகிவிட்டேன் என்று. நந்தலாலா என்பவர் கமெண்ட்டைப் படித்தால், இளையராஜாவும் மனது வந்து சமூகத்தினரை நேருக்கு நேர் பார்த்து கருத்து சொல்லும் பாக்கியம் வந்தால் உதிர்ப்பதும் "இதைப்" போல் இருக்கக் கூடும் என்று தெரிகின்றது. "இதைப்" போன்ற "வன்"முறையை, அது விளைவிக்கும் பாதிப்பை, ஒரு "ஒரிஜினல்" பருந்தும் "ஊர்"குருவிக்கு செய்து விட முடியாது.
அது போகட்டும், மூளையின் மடிப்புகளில் சில அதிக மடிப்புகளை இயற்கையின் சோழி உருட்டல் விளையாட்டில் பெற்றுவிட்ட தன்மையினாலே வரும் "அதி" மனித தீரங்களுக்கு எந்தளவு அவசியம் மற்றும் தேவையும் கூட? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் இதயத்தின் அளவைவிட சற்று அளவு பெரிதான ஒன்று அமைந்து போனதாலே விளையாட்டுத்தளத்தில் எல்லோரும் தளரும் நேரத்தில் தளர்ச்சி காட்டாமல் ஒருவர் விளையாடி வெற்றி பெருவதோ அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட முலைக் காம்பினைப் பெற்றிருப்பதாலே சர்க்கஸில் வந்து பார்வையாளர்களை கிளுகிளுப்பாக்குபவரோ அல்லது அதிவேகமான மற்றும் ஏரானமுறையில் சிந்தித்து செஸ் விளையாட்டில் பத்து ஆட்ட முறைகளுக்கு பிந்திய சாத்தியக் கூற்றை மனதில் படம் பிடித்து வெற்றி பெருகின்றவரோ, இவர்களுக்கிடையில் மிக அடிப்படையில் என்ன வித்தியாசம்? கூடவே விஞ்ஞானம் அஞ்ஞானம் மற்றும் கலை இலக்கிய வீர தீர தனி மனித "சாதனை"யாளர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு சமூகம் கடமை பெற்றிருக்கின்றது என்பதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி?
அனாதை.
Sunday, August 14, 2005
Subscribe to:
Posts (Atom)