Sunday, December 26, 2010

இந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்? புத்தகப் பார்வை

வெகு நாட்களுக்குப் பின் இங்கே எழுத வருகின்றேன். ஈழப் பிரச்சனைக்குப்பின் தமிழன் எனச் சொல்லவே வெட்கம் அதிலும் "இந்திய" என்பது மேலும் கேவலமான விசயம் என்னைப் பொருத்த வரையில். சிலரின் எழுத்துக்களை மட்டும் பிளாகுகளில் படிப்பது என்று இருந்தது பின் டிவிட்டரில் அங்கங்கே குறிப்புகளை எழுதத்தொடங்கி பின் சிலருடன் உரையாடலும் வந்து இன்று இங்கே. 10 நாள் அலுவலகவிடுப்பு ஒரு முக்கிய காரணம். இந்தப் பத்து நாள் லீவில் படிக்கவேண்டிய புத்தகங்க்கள் என எடுத்துவைத்து அதிகம். ஆனாலும் இன்று ஒரு புத்தகம் படித்து விட்டேன்.

"உருப்படாது நாராயன்" புண்ணியத்தில் படித்தது "இந்தியர்கள் விளையாடும் ஆட்டம்" எனும் புத்தகம் ஆங்கிலத்தில் - Games Indian plan - why we are the way we are" ரகுநாதன் என்னும் மேலாண்மை கல்லூரி ஆசிரியர் எழுதியது. சமீபகாலமாக நடத்தைசார்ந்த பொருளாதாரம் என்பது ஒரு தனிப்படிப்பாக பொருளாதாரத் துறையில் கிளம்பி வருகின்றது. பொதுவாக பொருளாதார அடிப்படை மனிதன் ஒரு நியாயமான லாப/நஷ்ட பகுத்தறிவு போடக்கூடிய ஒருவன் என்னும் பின்புலத்தில் உருவானது. ஒரு பெரும் கூட்டம், சுயநலமே ஆனாலும், தனிப்பட்ட ஒவ்வொருவனும் லாப/நஷ்டத்தை சரியாகக் கணக்கெடுத்து நடந்தால் அது ஒரு சமூகத்திற்கே நலன் பயக்கக்கூடியது என்னும் கோட்ப்பாடு பல்வேறு சூடான விவாதத்தைக் கொண்டுசெல்லும். அதை வேறொரு நாளுக்கு வைத்துவிட்டு, இந்த மனிதன் நியாயமான (சுயநலத்திற்கே கூட) லாப/நஷ்ட பகுத்தறிவு கணக்கு போடக்கூடியவன் தானா என்பதில் பொருளாதர அறிஞர்கள் ஆராயத் தொடங்கினார்கள். சமீபத்தில் மேற்குலகில் நடந்த பொருளாதர வீழ்ச்சி இந்த வகை ஆராய்சிகளுக்கு இன்று ஊக்கமாக இருக்கின்றது. டான் ஆரியாலி என்பவர் எழுதிய எதிர்பார்க்கக்கூடிய அபகுத்தறிவு (predictably irrational) புத்தகம் இந்தத் துறையில் எழுதப்பட்ட எனக்கு பிடித்த ஒன்று. அதைப் பற்றி பேசும் போது நாராயன் காட்டிய புத்தகம் தான் இப்பொழுது பார்வையில் இருக்கும் புத்தகம். இந்தப் புத்தகங்கள் மனிதநடத்தை சார்ந்த பொருளாதார புத்தகங்கள் எனலாம். மனிதநடத்தை மற்றும் மனித உணர்தல் துறைகளில் பல்வேறு ஆராய்சிகள், வரும் காலத்தில், நடக்கும் என நான் நம்புகின்றேன். இதற்கான குறிக்கோள் இப்பொழுது பொருளாதார மற்றும் நிதித்துறைகள் காரணமாயிருந்தாலும் ஒரு கட்டத்திற்குப்பின் செயற்கைஅறிவு(AI)த்துறை இந்த வகை ஆராய்சிகளினால் பலனடையும் எனவும் நம்புகின்றேன்.

நாராயன் முதலில் சொன்னபோது அவ்வளவு நம்பிக்கை இல்லை தான். மேலாண்மைத் துறையில் இந்தியக் பல்கலைக்கழகங்கள் சார்ந்து வரும் ஆராய்சிகளின் மீதான ஒரு "நம்பிக்கையும்" ஒரு காரணம்.

முதல் அதிகாரத்திலேயே என் கவனத்தைக் கவர்ந்தது இந்தியர்களைப் பற்றி ஒரு 12 குறிப்புகளை தந்திருந்தது தான். கீழகண்டவைகள் தான் அவை

1. குறைந்த அளவிலான நம்பகத்தன்மை
2. பொதுவில் முட்டாளாகவும் தனிப்பட்ட அளவில் புத்திசாலியாகவும் இருத்தல்
3. நடப்பதெல்லாம் விதிப்படிதான் என நம்புதல்
4. அதீதபுத்திசாலித்தனம் (பலனையே துர்பலனாக்கும் வகையினால)
5. பொதுசுகாதாரம் என்றால் கிலோ என்னவிலை
6. தனக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதி
7. கண்ணுக்கு முன்னாடி நடக்கும் அநீதியை சும்மா விடுதல்
8. புரையோடிப் போன ஊழல் மற்றும் இலவசத்துக்கு அலைதல்
9. பெரும்பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் தெரியாமை
10 ஒரு நடைமுறையை செயல்படுத்த தெரியாமை கூடவே நடத்தத் தெரியாமை
11. சட்டத்தையோ ந்டப்பையோ மீறக்கூட அதிகாரம் இருந்தால் தான் ஒருத்தருக்கு கெத்து என நம்புதல்
12 சட்டத்த்க்கு இடையேயான ஓட்டையை அடையாளம் கண்டுபிடிப்பதே முழுகுறிக்கோளாக அலைதல்

என்னை மேலும் கவர்ந்தது ஆசிரியர் "வெளியே நிற்காமல் நம்முடைய/நம்மைப் பற்றிய குறிப்புகள் என்றது. இந்தப் 12 குறிப்புகளையும் பொருளாதாரத்துறையின் ஆட்டவிதிகள் (Game theory) என்னும் படிப்பின் வழியாக உதாரணங்கள் மூலம் நாம் ஏன் இப்படி என அறிய முற்பட்டிருந்தார்.

ஆட்டவிதிகள் அதன் குறுகிய விளக்கத்தில் இரண்டு நபர்களுக்கு இடையே ஒத்துக்கொள் /ஒத்துக்கொள்ளாதே என இரண்டு தேர்வுக்கிடையில் , லாப/நஷ்ட கணக்குப் போட்டு எதைத் தேர்ந்தெடுத்தால் யாருக்கு அதிகலாபம் கிடைக்கும் என ஆராய வகை செய்யும் படிப்பு. இந்தப் படிப்பின் அதிஉச்சத்தில் நாடுகளுக்கிடையேயான யுத்த/உடன்பாடு ஆட்டம் நடத்தி அதிபர்களுக்கு எது நடத்தால் அதிக லாபமோ அல்லது குறைந்த நட்டமோ என எடுத்துக் காட்டி அவர்களுக்கான தேர்வை செய்ய உதவிக்கொண்டிருக்கின்றது.

இந்த ஆட்டவிதிப்படிப்புகளில் குற்றவாளிகளிக்கான தேர்வுப்பிரச்சனை என்பது ஒரு பாலபாடம்.
இரு கூட்டுக்களவானிகள் (நீங்க, நான்னு வெச்சுக்களாம்). பிடிபட்டுட்டோம்;தனித்தனியாக நமக்குள் பேசவிடாமல் வைத்து நமக்கு இரு தேர்வு கொடுக்கப்படுகின்றது. பிடித்தவர்கள் சொகின்றார்கள் - நீ ஒத்துகிடு அவனைக் காட்டிக்கொடு - அவனுக்கு 5 வருட தண்டனை உனக்க்கு விடுதலை ; இதே தேர்வு அவனுக்கும் கொடுத்திருக்கோம். இரண்டு பேருமே ஒத்துக்கிட்டா இரண்டு பேருக்குமே 4 வருட தண்டனை; இரண்டு பேருமே ஒத்துக்கலைன்னா 2வருட தண்டனை.



நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? ஆசிரியர் திரும்பத் திரும்ப பல்வேறு சூழல்களில் அடுத்தவனைக் காட்டிக்கொடுக்க நினைத்து மொத்தமாக மாட்டிக்கொள்கின்றோம் என பல வேறு வகைகளில் நிறுவுகின்றார். இதற்காக அவர் உள்நாட்டில் மேலாண்மை படிப்பவர்களிடமும் அதே சமயம் வெளிநாட்டில் (இந்தியரல்லா) படிப்பவர்களிடம் நடந்த சோதனைகளைச் சுட்டி, எவ்வளவு வித்தியாசம் இருக்கின்றது எனக் காட்டுகிறார். நான் படிக்கும்போது இதே வகையினாலான சோதனையில், "இந்தியனாக"த்தான் தேர்வு செய்தேன் என்பதை வெட்கத்துடன் இங்கே பதிவு செய்வது முக்கியம்;

இந்த ஆட்டவிதிகளில் இரு தனிநபர்களுக்கோ, குழுக்களுக்கோவான ஒப்பந்ததில் முதல்வெளியேற்றம் என்னும் ஒரு தேர்வு உண்டு. இந்த முதல்வெளியேறம், ஒரு உடனடி லாபத்தைக் கொடுக்கும். இந்தியர்கள், கூடுதல் "லாபம்" சம்பாதிக்க, இந்த முதல்வெளியேற்றம் தேர்வை, பல இடங்களில்- பொதுவாழ்வில், வியாபர உலகத்தில் கான்பிக்கின்றனர். அது தான் நம்முடைய அதிக ஊழலுக்கு, நடத்தைக்கெடுதலுக்கு, அழுக்குக்கு காரணம். மேலும் முதல்வெளியேற்றம், முதலில் வெளியேறுவது இல்லை, யாராவது வெளியேறினால் ஜென்ம்த்துக்கும் அவர்களுடன் உடன்பாடு இல்லை என்னும் அடுத்தகட்ட ஆட்டவிதிகளில், இந்தியர்கள் முதலாவதோ அல்லது மூனாவதையோ தேர்ந்தெடுக்கின்றார்கள். இரண்டுமே நீண்டகால "லாபத்திற்கு" ஊறுவிளைவிப்பவை என நிறுவுகின்றார்

புத்தகம் முழுக்க பல உதாரணங்கள் வழியாக முதலில் குறிப்பிட்ட 12 வகைகளை ஒவ்வொன்றாக ஆராய்கின்றார். 5,6,7 வது அதிகாரங்கள் தவறவிடக்கூடாதவை;


அரசியல்ரீதியாகவும் சமூகவழி சிந்தனைகளாலும் இந்த 12 வகையைவிட ஓரிரு படிகள் என் புரிதல்கள் தாண்டியிர்ந்தாலும், இந்தவகைப் பொருளாதாரம் சம்பந்தமான புத்தகத்தில் படிக்கும்போது எனக்கு வந்த ஆச்சர்யம் உண்மையானது. இதே குறிப்புகளை , ஒரு சமூக ஆய்வியல் வழியாக ஆராய்ந்தால் இன்னமும் அதிக பலன் இருக்கும் என நான் கருதினாலும், இந்தப் புத்தகம் உள்நாட்டுக்காரர்களால் "சமூகவழி சிந்தனைகளை" சற்று தள்ளிவைத்து விட்டு அதிகம் படிக்கப்பட வேண்டும் என கருதுகின்றேன். முதலில் உளமார இந்தப் பிரச்சனைகளை "இருக்கு" என நம்பினாலேயே, பல்வேறு துறைகள் வழியாக இதற்குச் சரியான மருந்தைச் சரியான இடத்தில் தேட ஆரம்பிக்கும் முனைப்பு வரலாம் ..

மேலும் படிக்க