Sunday, May 01, 2005

இன்று நாராயனின் பதிவுகளில் மனித இன வரலாறு பற்றிய கட்டுரையைப் படித்தவுடன் மூன்று வாரம் முன்பு சயின்ஸ் நியூஸ் எனும் வாராந்தரியில் ஒரு இன மரபனு தொடர்பான கட்டுரையைப் படித்த ஞாபகம் வந்தது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் மாண்டிரேசரின் சுட்டி (அது எங்கேன்னு தேடி நாக்கு தள்ளிப் போச்சு) எதேச்சயாக கையில் கிடைத்திருந்தது. படித்தவுடன் மேலே சொன்ன கட்டுரையை தமிழாக்கி எழுதனும் என்று நினைத்திருந்தேன். இன்ஸுரன்ஸ் மற்றும் வேறு நிறுவணங்கள் இதை ஆதாயப் படுத்த முனைந்தாலும், இந்தத் துறையின் அறிவு பரவலாக்கப் படுவதும் விரிவாக்கப்படுவதும் அவசியம் என நினைக்கின்றேன். மனிதன் ஓரினம் என்பது ஓர் அடிப்படை அறிவு என்பதில்லாமல் அது ஏதோ யாகமும் தியானமும் தியாகமும் செய்து ஞானச் சுடர் பெற்று அடையும் கஷ்டமான சித்தி என்றாக்கியிருக்கின்றார்கள். "சாதாரண" மனிதர்களுக்கு அந்த "ஞான அறிவெல்லாம்" தேவையில்லை என்பது போலாகி, பின்னஈனத்து (நன்றி பெயரிலி) பாணியில் இப்பொழுது இந்த இனம்/சாதி யென்று போட்டுக்கொள்வது வீரத்தனமான/வெளிப்படையான ஒன்றாக அசோகமித்ரன் போன்ற பெரும் பெரும் தலைகளாலேயே வெட்கமில்லால் செய்யப்படுகின்றது. அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக இந்த அறிவியல் துறை இந்த அடிப்படையை பரப்புமானால் அது நல்ல பரடைம் ஷிஃப்ட் ஆக ஆகலாம். நாராயணனின் பின்னுட்டலில் ரவி ஸ்ரினிவாஸ் பண்ணியிருப்பது என்ன வாதம் என்று புரியவில்லை. நாராயணனின் கட்டுரையில் எந்த இடத்தில் மேலினம் கீழினத்திற்கு தோதான வாதம் இருக்கின்றது என்று படிக்கும் போது படவே இல்லை. சில சமயம் இவர் வாய் திறக்காமல் இருந்தால் நல்லது போல் தோன்றுகிறது அல்லது என்னைப் போன்ற மர மண்டைகளுக்கும் விளக்கும் விதமாக இந்த வரிகளை இப்படி விரிக்கலாம் என விளக்கி இவர் எழுதலாம்.


சரி - எனது மொழிப்பெயர்ப்பு பயிற்சி..

scinece News - Apr 2005 Vol 167 No 15 Code of Many Colors - Can researchers see race in the genome?

by Christen Brownlee


இந்த கடந்த 65 வருடங்களில், இனத்தை வரையறுத்தல் என்பது குழப்பமான ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. இனம் என்பது சமூக ரீதியாக உண்டென ஆகியிருந்தாலும், உயிரியலில் அது நிறுவப்பட்டாலே ஒழிய இனவெறிக்கு வேறு ஆதாரமில்லை. - உண்மையிலேயே உயிரியலில் இனம் என்பது உண்டா? உண்டு இல்லை என இன்னமும் திட்டவட்டமாக நிறுவப்படாவிட்டாலும், அடிப்படை உயிரியலைப் புரிந்து கொண்டாலே, இனம் பற்றிய பார்வைகளில் பல மாற்றம் வரலாம்.இன்னமும் அறிவியலாளர்களை இனம் என்பதை மக்களைக் குறிக்க எனச் சொல்ல வைக்கவே கடினம். அறிவியல் மொழியில் இனம் என்பது ஒரு உயிர்வகைகளுக்குள்ளாக இருக்கும் மரபளவில் மாறுபட்ட, தனக்குள்ளாக இனப்பெருக்கம் செய்யும் துணை உயிர்வகைகளைக் குறிப்பது. இடரீதியாகவும் நெடுங்காலமாகவும் பிரிந்த உயிர்வகைகள், தனக்குள்ளாக செய்யும் இனப்பெருக்கத்தால், தன்னுடைய மரபனுவில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு இந்தத் துணை உயிர்வகையாக பெருகும். இந்தத் துணை உயிர்வகைகள் மரபனுவின் "அளல்ஸ்" (allels) என்னும் தனிப்பதிவை ஏற்படுத்திக் கொள்ளும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ரைட்'ஸ் விதியின் படி "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 25%த்தை தாண்டினாலேயே இரு வகைகளும் துனை உயிர்வகையாக அதாவது வேறு வேறு இனமாக ஒத்துக் கொள்ளப்படும். (100% வேறுபாடுகள் ஆனாலேயே இரு வேறு உயிர்வகைகளாக கருதப்படும்) தற்போது வேறு வேறு மனித இனமாக கருதப்படும் மக்கள் கூட்டத்தின் "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 15%க்கு மிகையாகக் கிடையாது.


100 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இனம் ஒரு பிரச்சனையில்லை. எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலே வசித்ததால், அந்த காலத்திய குறைந்த அளவிலான மனிதர்களிடையே வேறுபாடுகள் இல்லை. அவர்களிடமிருந்து பிரிந்து பல்வேறு இடங்களுக்குச் சென்ற, பரிணாம வளர்ச்சியுற்ற தற்கால மனிதர்கள், அவர்களின் பெரும்பாண்மை "அலல்ஸ்"களை தன்னுடன் எடுத்துச் சென்று உள்ளார்கள்.


லிசா புரூக்ஸ் என்பவர் ஒரு மரபனு ஆராய்சியாளர். அவரது கவனத்தில் பட்டது மரபணுவில் SNP என்னும் மரபணுத் தொடரும் மக்களுக்கிடையே இருக்கும் அந்தத் தொடரின் வேறுபாடுகளும். அதாவது ஒருவரது மரபனுத் தொடரின் வேதிப் பொருளை க ச ஞ ட என்னும் குறியீடு போல குறித்தால், "டகககசக" என்று அந்தத் தொடர் வரலாம். அதையே மற்றுமொருவருக்கும் "டகககஞக" என்று வரலாம். இந்த ஒத்தை குறியீடு மாற்றமே SNP எனக் குறிக்கப்படுகின்றது. பொதுவாக இந்த மாற்றங்கள் மரபனுத் தொடரின் முக்கியமில்லா இடங்களில் (புரதம் தயாரிக்காத) தான் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் சில சமயம் இந்த மாற்றம் முக்கியமான பகுதிகளில் வரும் போது அது உயிர்வகையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை , அதாவது உடல் ரீதியான மாறுபாடுகளையோ, நோயிற்கான சாத்தியத்தையோ தரலாம். ஒரு குரோமோசாமில் அடுத்தடுத்து காணப்படும் இந்த SNP தொகுப்பு ஹப்லோடைப்ஸ் எனப்படும். ஆப்ப்ரிக்க, அய்ரோப்பிய கிழக்கு ஆசிய மக்களை வைத்து, இந்த ஹப்மாப் (hapmap Project) எனும் ஹப்லோடைப்ஸ் ஆராய்ச்சியில், புரூக்ஸ், இந்த மக்கள் குழுக்களுக்கிடையே ஏராளமான ஒற்றுமையை கண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழுக்களையும் ஒரு நிற வட்டமாக வரைந்தால், 85 சதவிகிதம் ஒவ்வொரு வட்டமும் ஒன்றன் மேல் ஒன்றாக படியும். மேலோட்டமான இனவேறுபாடுகளான நிறம், முடியின் திடம் போன்றவைகள், இந்த வேறுபாடுகளில் வரவில்லை எனக் குறிக்கின்றார் புரூக்ஸ். இனம் என்பது மரபனுவில் உள்ள வேறுபாடு என நம்பியிர்ப்பவர்களுக்கு இந்த கோட்பாடு உறைப்பது கடினம் தான் என்கிறார் ஜார்ஜியா டங்ஸ்டன் என்னும் மரபணு ஆராய்ச்சியாளர்.


மனித உயிர்திசுக்களையும் வேற்றுப் பொருளையும் மனித நோய் தடுப்பு சட்டகம் (human immune system) எவ்வாறு வேறுபடுத்தி உணர்கிறது என்பதை ஆராய்கிறவர் தான் டங்ஸ்டன். இந்த உணர்தலுக்கு காரணமான மரபனுவிற்கு "Histocompatibility" மரபணு எனப் பெயர். இந்த மரபணுவின் ஒத்தவகை கொண்டவர்களுக்கு இடையே தான் மனித திசுக்களை/உறுப்புகளை மாற்றிக் கொள்ளமுடியும். இந்த திசுமாற்றத்தினை நிர்ணயிப்பதில் இனம் எந்த வகையிலும் உதவுவதில்லை என்கிறார் டங்ஸ்டன். இந்த பரந்துவிரிந்த கருப்பு என்னும் இனத்தில், ஒரு கருப்பருக்கும் வேறு கருப்பருக்கும் இந்த மரபணு கடும் மாற்றம் கொண்டிருக்கலாம். ஒரு கருப்பரின் இந்த மரபணு ஒரு வெள்ளையருக்கு ஒத்துப் போனாலும் வேறு கருப்பருடன் மாறுபடலாம் என்கிறார் டங்ஸ்டன்.


மார்க் சிரவர் என்னும் மரபனு அறிவியலாளர், இந்த 15% மரபணு வேறுபாடுகளும் மக்கள் குழுக்களுக்கிடையே பூளோகரீதியாக ஒரு தொடராக நீளுகிறது என்கின்றார். அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்வீடன் தேசம் வரை மக்கள் மாதிரியை (sample ??- என் தமிழ் அறிவு, இத்துனைக்கும் பத்தாவது வரை தமிழ்வழி முறையில் படித்திருந்தும்- என்னைத் தூக்கில் தொங்கலாம் என வைக்கின்றது ) எடுத்துக்கொண்டால் இந்த வேறுபாடுகள் ஒரு தொடராக நீளும். இந்தப் புள்ளிதான் இந்த வேறுபாடுகளைக் திட்டவட்டமாக குறிக்கும் குறியீடு என அளவிட முடியாதவாறு இந்தத் தொடர் இருக்கின்றது என்கிறார் மார்க்.


இதே மார்க் சிரவர், DNAPrint Genomics என்னும் கம்பெனியில் வேலையில் இருக்கின்றார். இந்தக் கம்பெனி, உள்கன்னத்தில் இருக்கும் மரபனுவை எடுத்து மூதாதயர்களில் எவ்வளவு சதவிகிதம் ஆப்பிரிக்க , கிழக்காசிய, அய்ரோப்பிய, அமெரிக்க கலப்பிருக்கின்றது எனக் காட்டக் கூடிய அளவு தகவல் சேகரித்து வைத்திருக்கின்றதாம். தன்னைச் சுத்த வெள்ளை என நம்பிருந்த இவரின் உள் கன்ன மரபனுவில் "டஃப்பி நள் அளல்" (duffy null allel) என்னும் சப்-சஹார ஆப்பிரிக்காவினரில் மட்டுமே காணப்படுவது இருந்ததாம். மொத்தத்தில் 11% மேற்க்காப்பிரிக்க மூதாதயர் கலப்பு இருந்ததாம் இவரது மரபனுவில்.


*************

எனக்கும் இந்த டெஸ்ட் செய்ய வேண்டும் என ஆவல் இருக்கின்றது. ஏதோ கருப்பன் என நினத்துக் கொண்டிருக்கும் என் தலையில், இல்லை 20% சிங்கு கலப்பு இருக்கின்றது என்று மண் அள்ளிப் போடலாம்.


ஏதோ முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், தமிழாக்கத்தில் ஏதேனும் சிறு தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

ஹி ஹி சரி இப்பொழுது இந்தக் கட்டுரையின் சுட்டியைத் தருகின்றேன். இது இரண்டு பாகங்களாக வந்த கட்டுரை. அந்த இரண்டு பாகங்களையும் இங்கே சொடுக்கலாம்.
பாகம் 1


பாகம் 2


மே 2 2005

இந்தச் சோதனையில் கலந்து கொள்ளாமல் சுயமாக இருக்கவிரும்பும் குடிகளின் குரல்களை காண, ரவி ஸ்ரினிவாஸ் கொடுத்த சுட்டி

http://www.ipcb.org


மேலும் படிக்க