Sunday, November 14, 2004

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த பிளாக்கிற்குள் நுழைய எனக்கே எதோ வித்தியாசமாக உள்ளது. இந்த இடைவெளியில் எவ்வளவோ முக்கிய நிகழ்வுகள் நடந்து விட்டன.அமெரிக்க கழுத்து சிவந்த மக்கள் ஒன்று சேர்ந்து தங்களது தலைவன் எவன் எனத் தெளிவாக விளக்கியது சற்று கசந்தாலும் பின் ஒத்துக்கொள்ள வைத்து விட்டது. கான்பெஃடரசிக் காரர்கள் தான் இப்பொழுது இந்த தேசத்தின் தலைவர்களாக முடியும் என்பது இன்றைய விதி போலும். என்னதான் இருந்தாலும் இந்த தேசத்தின் மட்டமான தலைவன் கூட நான் பிறந்த தேசத்தின் "நல்ல" தலைவனை விட பலமடங்கு மேலானவனாக இருக்கும் பொழுது என்னைப் போன்றவர்கள் வாய் திறப்பது கேவலம் தான். முன்பு ஒருமுறை அமெரிக்க தேசத்தினை மனதார வெறுக்கும் ஒரு இடதுசாரி நண்பனிடம் பேசும் போதும் இதைத் தான் சொன்னேன். நமது இந்திய தேசத்திற்கு அமெரிக்க தேசம் போல ஒரு பலம் இருந்தால் அது எந்த அளவில் பேயாட்டம் போடும். யோசிக்க முடியுமா என்று. கேவலம் ஒன்றுக்கும் யோக்கியதை இல்லாமல் இருக்கும் போதே அது அதனைச் சுற்றியுள்ள அதனினும் சிறிய அத்துனை நாடுகளிடம் ஆடிய ஆட்டம் தான் என்னே என்று. அவன் வாய் திறக்கவில்லை. அமெரிக்காவில் பழமைவாதிகள் வென்றிருப்பதும் ஒன்றும் ஆச்சர்யமில்லை. பொதுவாக ஒவ்வொரு நாடுகளிலும் இளம் வயதினர் எண்ணிக்கை (18 - 35) வயதோனரை (36 + ) அதிகமாக, அந்த தேசம் லிபரலாக தாரளமயமானதாகவும் அதுவே எதிர்மறையாகப் போகும் போது அந்த தேசம் பழமைவாதியாகவும் தாரளமயமாக்களுக்கு எதிர்மறையாகவும் ஆகும். அமெரிக்கா மற்றும் சில அய்ரோப்பிய நாடுகளின் தற்போதைய பிரச்சனை அது வயதானோர் தேசம் ஆகிப் போய்க் கொண்டிருப்பது தான். கூடவே மத்திய கிழக்குப்பகுதின் கொந்தளிப்பான நிலை. அதன் அரசாங்கங்களும் பழமைவாத அரசாங்கங்களாகத் தான் அமைய முடியும்.

சரி ஐஸ் உடைத்தாயிற்று. இனி உண்மையாக இங்கே வந்ததற்க்கான காரணம் பார்ப்போம். சில நாட்களுக்கு முன் ரோசாவசந்துடனான கடிதப் போக்குவரத்தில் ஜெயமோகன் போன்ற வலது சாரி இந்திய சித்தாந்தங்களில் ஊறிப் போனவர்களை எதற்க்காக தவிர்க்கவேண்டும் என்று காரசாரமாக அதே சமயம் ஒரு தட்டையான காரணத்தைக் காட்டி எழுதியிருந்தேன். அந்த சமயத்தில் அவர் ஜெமோவின் ஏழாம் உலகம் என்ற நாவலைப் பற்றி இங்கே எழுதுவதாக சொல்லியிருந்த சமயம். நான் இப்படிச் சொல்லப் போக அதனால் அவர் இந்த இடம் எதோ என்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கான தனிப்பட்ட இடம் என்று தவறாக எண்ணி, எழுதவில்லையோ என்னமோ தெரியவில்லை. ஆனாலும் அவருடன் பேசிய பின் எனக்குள் இந்த ஜெமோவை குறிப்பாக அவரது இலக்கியப் படைப்புகளை கட்டம் போட்டு ( இதைப் போலவே வேறு பலரும் அடங்கிய லிஸ்ட்டே உண்டு)தவிர்ப்பதால் ஏதேனும் இழந்துவிட்டுக் கொண்டிருக்கின்றெனோ என்று ஒன்று.அவரே ஜெமோ போன்றோரை தவிர்க்ககூடாது என்று சொல்லும் போது ஒரு சங்கடம் வரத்தானே செய்யும்.
பொதுவாக இந்திய துனைக்கண்டத்தின் தற்போதய சமூக அமைப்பின் கொடூரங்களின், வக்கிரங்களின், ஆணவங்களின், வன்முறைகளின் பின்புலத்துடனே அதன் செல்வங்களாக கருதப்படும் விடயங்களைப் பார்க்கும் பழக்கம் எனக்குள் எப்போழுது ஒட்டிக் கொண்டது எனத் தெரியவில்லை. அப்படி பார்க்கும் போது அந்த செல்வங்களாக அறியப்படுவது என்னை எந்தவிதத்திலும் கிளரச்செய்வதில்லை.அந்தச் செல்வங்களும் அந்த சமூக வக்கிரங்களும் ஒன்றுக்கு ஒன்றுடன் பின்னிப்பினந்தது. எந்தச் சூழலிலாவது ஒரு தியாகய்யரை எந்த தலித்தாவது சொந்தம் கொண்டாடமுடியுமா? அப்படி இருக்கையில் தியாகய்யருடன் ஒரு இளையராஜவையும் சேர்த்து விலக்கினால் எந்த தலித்தாவது இழப்பது உண்மையிலேயே என்ன? தியாகய்யர் பாணிக்குப் போன இளையராஜாவையும், அவர்களையும் அறியாமல் இழக்கவில்லையா? இந்தக் கணக்கில் எந்தச் செல்வம் யாருக்காக? இழந்த உருமாறிய செல்வத்தை மேலும் ஆராதிப்பது அந்தச் செல்வத்திற்கு மேலும் ஒரு அந்தஸ்தைக் கொடுத்து அதைக் களவாடியவர்களை மேலும் லாபகரமாக்குவது எதற்கு. மேலும் தியாகய்யரும் இளையராஜாவும் மட்டுமே இசையைப் பொறுத்த அள்வில் கிடைக்கும் சாய்ஸ் இல்லை. இன்றையதிறந்துவிடப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் மாற்று ஏற்பாடுகளுக்கு அளவே இல்லை. திட்டமிடப்பட்ட தவிர்த்தல்களும் நுகர்தல்களும் பலத்த வேறுபாட்டைக்கொடுத்து ஊறிக் துளைத்துகொண்டிருக்கும் ஆணிவேர்களையே எரித்துவிடலாம். இதைச் சரியாக , ரசனை போன்ற பஜனை காட்டி செய்பவர்கள் பார்ப்பனர்கள். விஷமே வெளியே தெரியாது. சுஜாதா பார்த்திபன் புத்தகத்தை விமர்சிக்கிம் போது பார்த்திபனின் அதிகப்பிரசங்கித்தனத்தைவாயடித்தனத்தை காட்டி ஒரு இமேஜரியைக் கொடுத்து விட்டு விமர்சனத்துக்குள் நுழைவார். அதே சமயம் அதே அதிகப் பிரசிங்கித்தனத்தை வாயாடித்தனத்தைக்கொண்ட எஸ்விசேகரின் எல்லா நாடகங்கள் கொண்ட புத்தகங்களை விமர்சிக்கும் போது ஒரு சிறிய விளம்பரமே நடக்கும். சரி மேலும் விலகாமல் சொல்ல வந்த விடயத்திற்கு வருகின்றேன்.
ஏதெச்சையாக ஜெமோவின் காடு நாவல் படிக்க கிடைத்து. ஏழாம்உலகம் கேள்விப்பட்ட வரை என்னால் அதனுள் நுழையமுடியாது. 90 களில் ஜெமோவின் ரப்பரை பாதிவரை படிக்கவே அது கொடுத்த அதை சாடிசம் என்பதா மாசொயிசம் என்பதா என்ற குழப்பம் வரும் அளவு இருந்த துன்பச் சித்திரம் தாங்கவில்லை. இன்றையதேதிக்கு அதில் இருந்த ஒரு சித்திரமுனம் நினைவில் இல்லை அது கொடுத்த சித்திரவதையைத் தவிர. ஏழாம் உலகம் பின்புலம் ரப்பரை தோற்கடிக்கும் போலுள்ளது. என்னால் தாங்காது. விஷ்ணுபுரம் அதனுடைய அளவே எதிரி. தற்போதைய நேர நெருக்கடியில் சாத்தியமில்லை. காடு அப்படியிருக்காது என்று ஒரு நம்பிக்கை. குறிஞ்சி / முல்லை , புனர்தலும் புனர்தல் பொருட்டு / என்ற தினை மரபுகள் என்னை சரி போட்டுப் பார்க்கலாம், என்னதான் இருக்கின்றது என்று பார்த்து விடலாம் என்று இறங்கவைத்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை. தொட்டிக்குள் சுடு நீரை நிரப்பி நல்ல வாசனை தரும் மெழுகை ஏற்றிவத்துவிட்டு, புத்தகத்துடன் இறங்கி விட்டேன். இனி...
இந்தக் கதையை படிக்க முனையும் ஜெமோவின் ஆராதனை கோஷ்டியில் இல்லாதவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து முன்னுரையை முதலில் படிக்கவேண்டாம். சற்று பொறுமையுடன் இருந்தால் கதையுனுள் உள்ளே நுழைந்து விடலாம். மலையாளமும் தமிழும் ஒருவிகிதத்தில் கலந்த ஒரு மொழிதான் கதையின் ஆதார மொழி. குறைச்சலாக எண்பதிற்கும் மேற்பட்ட ஒருவன் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இருந்து நாற்பது வயது வரையில் நினைவோடைகளில் திளைப்பதாக கதை அமைப்பு. கதை உத்தி காலம் என்ற பரிமானம் நேர்கோட்டில் இயங்காது, நினைத்த போது 18ற்கும் அல்லது 38ற்கும் அல்லது 40க்கும் அவ்வப்போது பயணித்தவாறு உரக்க சொல்லிச் செல்லும் முறையில் அமைந்துள்ளது. கதைச்சொல்லியின் நினைவுகளில் சிக்கிய வண்டல்கள் தான் கதை. ஆனால் அந்த வண்டல்களில் இருக்கும் சகதியோ ஒரு சாதாரண மனிதனின் நினைவுகளில் உள்ள சகதி கிடையாது என்று துண்டு போட்டுத் தாண்டலாம். இரண்டாவது அத்தியாத்திலேயே ஆரம்பித்து விடுகின்றது மொத்த கதைப் போக்கின் ஒரு சாரல். சிறுபிள்ள வாதம் வந்த ஒரு பெண்ணை கதைசொல்லியின் மாமா வன்புணர்வு செய்கின்றார்/ அந்த சாக்கில் ஊரே வன்புனர்விற்கு ஆளானவளை பயன்படுத்திக் கொள்ளுகின்றது / அதன் பின் பிறந்த குழந்தை மூளைக் கோளாறுடன் பிறப்பது / அந்த பிள்ளை எல்லோருக்கும் புணர்வு பொம்மை யாதல் / அந்தப் பிள்ளைக்கு காக்காய் வலிப்பு வரும் / சாம்பல் குழியில் காக்காய்வலிப்புடன் விழ்ந்து நுரையீரல் முழுக்க சாம்பல் ரொம்பி இறத்தல் /முதலில் வன்புனர்வு செய்த கதைச் சொல்லியின் மாமா, சிறு ஆண் பிள்ளைகளை புணரும் கிறிஸ்தவ பாதிரியாரிடம் சேர்தல் /பாதிரி இறந்தவுடன் பணக்காரர் ஆதல் / தனக்கு காண்டிராக்ட் தொழில் கற்பித்தவர் பெண்டாட்டியுடன் நெருக்கமாகி இன்னும் பணக்காரர் ஆதல் / அந்தப் பெண்டாட்டி மஞ்சள் காமலையில் இறத்தல் / பணக்காரராகி அரச வம்சத்தை சேர்ந்த தன்னுடைய வயதில் பாதி இருக்கும் காமம் ஊறல் ஏறியஒரு பெண்ணை விலைக்ககு வாங்கி வருதல் / அந்தப் பெண்ணை ஊரே வெட்டை ரோகம் வந்தவள் என்று பொறாமையில் பொசுங்கியது / அந்தப் பெண்ணிற்குஇரண்டு குழந்தைகள் - ஒன்று ஆண் ( இவன் கதையில் என்ன ஆணான்? ) ஒரு கரிய, சூம்பிய கால்களுடனான மந்த புத்தியுடைய பெண்.(இப் பெண் பின்னால் கதைச்செல்லியின் மனைவி). சிவப்பான பெற்றொருக்கு பிறந்த அந்த கரிய , சூம்பிய கால்களின் நதிமூலம் அந்த வீட்டில்வேலை பார்க்கும் அதே கரிய கழுத்து நீண்ட சூம்பிய கை காலுடன் வேலை பார்த்து வரும் ஒரு புலையனுக்கும் ( மந்த புத்தியை வெளிப்படையாக இழுக்கவில்லை, கூடவே புலையனுக்கு "ஆர்" விகுதி - முற்போக்கு?) அரச வம்சத்திற்கும் தகாத உறவில்பிறந்த பெண்ணாக்கும்./ கதைசொல்லியை மாமன் பெண்டாட்டி இழுக்கப் பார்த்தல் / இவ்வளவு சகதியும் வெறும் ஒரு அத்தியாத்தில். இதைக் கட்டுடைத்தால் சமூகத்தை ஆதிமுதல் அந்தம் வரை வெறுக்கும் ஒரு மனநிலை தான் மிஞ்சும். இது தான் இந்தக் கதையின் மரபணு. முழுக்கதையும் இந்த மரபனுவால் கட்டப்பட்ட ஒரு பொதியான யானைக் கழிவு போன்ற ஒன்று. அந்த யானைக் கழுவு இருக்கும் இடம் ஒரு மலையடிவாரம். ஆகவே காடு என்ற தலைப்பு. இந்தக் கதையில் இருக்கும் அத்துனை காடு மற்றும் காட்டைப் பற்றிய சூழலை எங்கெங்கோ படித்த ஞாபம் ( ஸ்கௌட் குழுவில் பேசப்படும் விஷயங்கள் வரை) வருவதை தவிர்க்க முடிவதில்லை. காட்டில் திசைகள் பிடிபடாமல் கதை சொல்லி அலைந்து திரிந்தது நன்றாக வந்திருக்கலாம், ஏழு எட்டு மாதங்களுக்குமுன் ரீடர்ஸ் டைஜெஸ்டில் அமெரிக்க காட்டில் ஒரு 13 வயது மகளுடன் காணமல் போய் ஓரிரு வாரங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட ஒரு தாயைப் பற்றிய விரிவானஉண்மைக் கட்டுரை படிக்காதிருந்தால். கூடவே குறிஞ்சித் திணையையும் முல்லைத் திணையையும் வலிய இழுப்பது போல் கதையின் ஊடாக அதன் கருப்பொருள்/ பொழுது / மரங்கள் / விலங்குகள் / திணை பாடு பொருள் என லிஸ்ட் போட்டு எழுதிவைத்து, கதை சொல்லியின் தனிமை நினவலைகள் மேற்சொன்னவற்றைகலந்து கட்டி அலைகின்றது. மரபுத் தொடர்ச்சி வேண்டுமல்லவா? ஆராதனைக் கோஷ்டிகள் மற்றும் "கலை இலக்கிய" அரசியல் காரர்கள் கதையின் நுட்பத்தனத்தை ஆராய இடம் கொடுப்பதுபோல் இவைகள் தெளித்து விடப்பட்ட தோற்றம்.

இந்தக் கதையின் கூடாரத்தை தாங்கிக் கொண்டிருக்கும் முக்கிய தூண்கள் நான்கு, கதை சொல்லியைச் சேர்த்து. குட்டப்பன், அய்யர் மற்றும் போத்தி. குட்டப்பன் உடல் உழைப்பின் மன்னன். அசகாயசூரன். கர்மயோகி. தலித்தாக இருந்தாலும் "உழைப்பின் உன்னதமாக" இருப்பதால் "தன்னளவில் முழுமையாக திருப்தியாக", "தன்னளவில் கர்வத்துடன்" வீரமாக, தவறு செய்யும் முதலாளியையே சாத்தும் கர்மவீரராக வாழ்ந்து கடைசியில் தான் நம்பிய வழியிலேயே தன் மரணத்தையும் அளித்த தன் குல தெய்வங்களுக்கான விசுவாசத்துடன் வாழ்ந்தவர்.கிறிஸ்துவெல்லாம் ஒரு ஆட்டிடையன் , ஆடு போன்ற சுயபலமில்லாத கோழைகளுக்கான கடவுள் என்பது குட்டப்பனின் செய்தி. மலை காடுகளெல்லாம் வெள்ளைக்காரன் தன்னுடைய மதத்துடன் உள்ளே வந்ததால் தான் அழியத்தொடங்கியது என்ற அறிவியல் பூர்வமான செய்திகளின் மொத்தகுரல் தான் குட்டப்பன். சிலுவையை வைத்துக் கொண்டு , மருந்து கொடுத்தால் மதம் மாறுகின்றாயா என்று கனிவையும் சேவையையும் பேரம்பேசும் மிஷனரிகள் இருக்க எந்தவித பலனும் எதிர்பாராமல் சட்டென்று ஒரு குழாயை வாயில் கொடுத்து நோயாளிகளின் கபத்தை உறிஞ்சும் மாம்னிதன்தான் குட்டப்பன். குட்டப்பன் பேசுவதெல்லாம் மலையாளத் தமிழில் இருக்க, சமிஸ்கிருதப்படுத்தப்பட்ட, நாட்டார் தெய்வமான நீலியின் கதை மட்டும் சுத்த தமிழில் குட்டப்பன் வாயில் இருந்து வந்தது சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் என்ன சொல்லபட்டது நாட்டார் தெய்வமாயிற்றே. அந்தவோட் பாங்க்கையும் தொட்டு விட்டாயிற்று.
அடுத்து அய்யர். இவர் கதைக்கு உள்ளே வந்தபோது ஆசிரியர் மனதில் இவர் ஒரு சாதாரண நபராக, "அய்யராக" கூட இல்லாத மாதிரி ஒரு தோற்றம். சடாரென்று இவருடைய கரெக்டருக்கு உயிர் வந்தது போல கதைச்சொல்லியின் சங்கத் தமிழ் புலமையின் சாக்கில் இவர் உயிர் பெறுகின்றார். இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் பாலச்சந்தரின் படங்களில் வரும் தொணதொனா அல்லது உதட்டை குவித்து நாக்கை சுழட்டும் அறிவுஜீவி கதாநாயகிகளின் சாயலில் இருந்துபின் சற்று வளர்ந்து சுஜாதாவின் வசந்துக்கு வயசானால் இப்படி ஆயிறுப்பாரோ என்னும்படியான ஒரு கதாபாத்திர படைப்பானது. அறிவு ,பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் தடவுதல் வரைச் செல்லுபவர், எதையும் லேசாக எடுத்துக் கொண்டு கதையின் முடிவு வரை ஒரு விதஆன்மீக வளர்ச்சியுடன் வளர்பவர். மற்ற எல்லா கதாபத்திரங்களும் மன வளர்ச்சியில் அதே அளவில் கதை முழுக்க இருக்க அய்யரிடம் மட்டும்ஒரு வித நேர் கோட்டில் செல்லும் வளர்ச்சி. லௌகீக விஷயங்களில் குட்டப்பனுக்கு தலைகீழ் என்றாலும், மன ரீதியான திருப்தியில் இவரும் குட்டப்பனைப் போன்றவரே. யானை அடித்து வீர மரணத்தை விரும்பி ஏற்றவர் குட்டப்பன்என்றால் மெல்ல மெல்ல தாடிவளர்த்து சாமியாராகி ஆன்மீக பரினாம வளர்சியின் கடைசிப்படிக்கட்டுகளில் இருப்பவர் இவர். கதைச் சொல்லியின் மனதிற்குமிகவும் ஒத்தவர்.

அடுத்தவர் போத்தி. குட்டப்பன் , அய்யர் அளவுக்கு அவ்வளவு டீடெயில்கள் இல்லாவிட்டாலும் அதே "வகை" கதாபாத்திரம். கோவில் புணஸ்கார நிர்வாகி. கதைச்சொல்லியின் இளமைக்கால நாட்களின் ஆதர்சம். அழிந்துவரும் இந்து வாழ்கை முறையின்கடைசி நிழல்கள் இவரைப் போன்றவர்கள். புலைக்குடியிலே கேறி இறங்கினா வயலு செழிக்கும் போன்ற வசனங்களுக்கு சொந்தக்காரர் இவர்தான். அதுக்கு புலையன் நம்ம வீட்டிலே கேறி இறங்கின சரியாகிஅகிடுமா என்றால் ஆயிரமரருஷமா வயலுகஇப்படித்தான் விளைஞ்சிருக்கு, புது சீமையுரம் எல்லாம் தேவையில்லை என்று பதிலும் அடிப்பார். இவருடன் கூடவே இவருடைய, புத்திர சோகத்தில் மறைகழண்ட, இவர் தங்கை, இவர்கள் நண்பர்கள் குழாம், கதைச் சொல்லியின் தாய் மற்றும் குழந்தையுடன் இருக்கும் அம்பிகா அக்கா, எதிர்காலத்தில் வாழும் மனைவியிடம் தினம் திட்டு வாங்கும் தமிழ் பேசும் தந்தை. மூளை மந்தமான, புலையனுக்கு பிறந்த மனைவி. இந்தக் கும்பல்கள் குறிஞ்சி முல்லைப் பகுதிகளில்இருந்து சற்று தள்ளி வாழும் பிரஜைகள் ( முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பகுதி??) .
குறிஞ்சி/முல்லைக்கு திரும்ப வந்தால் குட்டப்பனுக்கு சரியான ஜோடியாக சினெகம்மை. குட்டப்பனைப் போன்றே கிறிஸ்துவெல்லாம் தேவைப்படாதவர். நல்ல சௌகரியமானஎந்தவித பாபம் / சின் போன்ற கருத்தாடல்களுக்கும் சிக்க விரும்பாமல் வாழ்கையை அனுபவிப்பவர். கிறிஸ்துவிடம் போய்ச் சார்ந்தால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்னும்முடிவிற்கு இட்டுவர இந்தப் பாத்திரம். ரெசாலம் என்றொரு சாது மிரண்டால் கதாபாத்திரம். தன் பெண்டாட்டியை தன் முதலாளியிடம் கொடுத்துவிட்டு, அந்த முதலாளிக்கு உண்மையாக இருப்பவர். எந்தவித கொழுகொம்பும் இல்லாமல் தவிக்கும் ஜீவன் , ஒரு தேவாங்கை அடைந்தவுடன் சாந்தமடந்தாலும் அந்த தேவாங்கை புலி அடித்து தின்னவுடன் , தலை மூடி கழன்றவர். இவரைக் கொண்டு போய் இவர் ஊரில் அநாதரவாய் தள்ளிவிட்டு திரும்பும் போது கதைசொல்லியின்மீதான கொஞ்ச நஞ்ச ஈர்ப்பும் அந்த இடத்துடன் ஓடிப் போகின்றது. கிறிஸ்து மிகவும் தேவைப்படுகின்ற சிரிசு என்றொரு கரெக்டர். குட்டப்பனின் நேரெதிர் கதாபாத்திரம். எல்லாவிதத்திலும். திருவணந்தபுரம் பத்மநாப சாமிக்கு உள்ளுர ஏங்கும் ஆனால் அது பிரபுக்கள் சாமியானதால் கிறிஸ்துவை கையில் எடுத்த கிறிஸ்துவ தலித்துகளின்பிரதிநிதி. இவருடைய கோமனம் அவிழ்ந்தால் ஒரு பெருச்சாளி தொங்கும். அந்தப் பெருச்சாளி கிடைக்கும் வரை, உள்ளுர புகைந்து கொண்டே இருக்கும் பாத்திரமாக ஒரு கிறிஸ்தவ தலித் பெண். சிரிசும் ரெஜினாளும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காததாலே தான் கிறிஸ்துவை தூக்கி வைத்துக் கொண்டார்களோ என்பது போலவே இவர்களது பாத்திரப் படைப்பு பெருச்சாளி சந்திப்புக்கு முன்னும் பின்னும். கம்பனைப் படிக்கும் கிறிஸ்தவரை சற்றும் மதிக்காத ,அதற்காகவே துவேசிக்கும் ஒரு கிறிஸ்தவ குடும்பம்.
இந்த்க் கதையில் வரும் கிறிஸ்தவ நபர்களின் / குடும்பங்களின்படைப்பெல்லாம் ஒருவித கிண்டலுடனே வருவது ஒருவித வாசகர்களை திட்டமிட்டே விலக்குவது போலும் ஒருவித வாசகர்களை அவர்க்ளை அறியாமல்மேலும் ஆராதிக்க வைக்கும் திட்டத்துடன் இருப்பது தமிழினி பிரசுரத்திற்கு தேவைப்படலாம். நாகர்கோவில், தூத்துக்குடி, கன்யாகுமரி, திருநெல்வேலி போன்ற இடங்களில் வசித்த இந்து தமிழ் இலக்கியவாதிகளின் கிறிஸ்தவ கதாபாத்திரங்களை யாரவது ஆராய்ந்திருக்கின்றார்களாஎன அறிய மிகவும் ஒரு ஆசை. சுந்தர ராமசாமியாகட்டும் வண்ணநிலவனாக, புதுமைப்பித்தனாக இருக்கட்டும் இவர்களது கிறிஸ்தவ கதாபாத்திரங்களை எல்லாம், ஒரு நக்கலுடன், பயந்து ஓடி ஓளியும் ஒரு நாயைப் பார்க்கும் கேவலம் உள்ளூர ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில்படைத்த படைப்பாகவே காண்கின்றேன் இந்தக் கதையையும் சேர்த்து.
கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கு வரவேயில்லை. கதைச்சொல்லியே சொல்லுவது போல அந்தக் கதாபாத்திரம் குறிஞ்சிப் பூதான் . மிகவும் சாதாரணமான ஒரு பாத்திரம். அதன் முக்கியத்துவுமே அதன் ஆயுள் மற்றும் இருப்பு, குறிஞ்சிப் பூ போலவே. நாட்டு மனுசாளைப் பார்த்து மயங்கும் ஒரு வெகுளி காட்டு வாசி. தன் வீட்டிற்குப் பக்கத்திலேயே ஓடைகள் இருந்தாலும் , கஷ்டப்பட்டு 17 மைல்கள் நடந்து கதாநாயகனின் குடிய்ருப்பிற்கு நெருங்கிய ஒரு ஓடையில் குளித்து கதாநாயகனின் மனதில் ஒரு பித்தைத் தெளிப்பவர். குறிஞ்சிப் பூவைக் காட்டி அந்தப் பித்தை நீக்குவதுடன் இவரதுதேவை கதையில் முடிந்து விடுகின்றது. கடைசியில் குட்டப்பனுக்கு தெரிந்த காட்டுமருந்துகள் கூட தெரிந்திராத , வெள்ளைக்காரன் மருத்துவத்தை நம்பி"ஹாஸ்பிடலுக்கு" வந்து உயிரிழக்கும் ஒரு மலைச்சாதி பாத்திரம். இவைகளைத் தவிர ஏராளமான மன பிறழ்விடனான் அல்லது மனவளர்சி குறைந்த , ஆக்ஸிடெண்டில் எல்லாம்நசுங்கி இறந்த, மேலும் சோரம் போவதையே லட்சியமாகக் கொண்ட, என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். குறிஞ்சியின் தினை கூடலும் கூடல் நிமித்தமா சோரம் போதலும்சோரம் போதல் நிமித்தமா எனச் சந்தேகம் வரும் வரை. தமிழர்களின் "கற்பு" பைத்தியத்தை தெளிவித்தே ஆக்கவேண்டும் என்ற வெறியில் செய்த கூக்குரல் போலுள்ளது இந்தக் கதையில் இருக்கும் சோரம் போகும் வெறி.
கடைசியில் கதாநாயக கதை சொல்லி தனிமையில் அது காடாக, மரத்தடியாக இருந்தாலும் கை மைதுனம் செய்யும் ஒரு ரிஷ்ய சிருங்கர். தன்னுடைய மைதுனத்திற்கு உதவியாக இருக்கும் மாமியே படுக்கைக்கு அழைக்கும் போதும் போகாத, காட்டுக் குட்டிகள் சினேகம்மை, மார்பு தட்டையான ரெஜினாள் ஆகியோரைபொருட் படுத்தாத கட்டுப்பாடுடை தலைவன் தான் இவர். பதினெட்டு வயதில் சங்க இலக்கியப் படைப்புக்களை விரல் நுணிக்குள் வைத்திருக்கும்நவீன திருநாவுக்கரசு இவர். அந்த ஞானத்தாலேயோ என்னவோ ஆங்கில மருத்தவரிடம் மனப் பிறழ்விற்கு சிகிச்சைப் பெற்றுக் கொண்டே அந்த மருத்தவரின் மனப் பிறழ்வை ஆராயும் அளவிற்கு சித்தி கொண்டவர். ஆசிரியர் சங்கச் சித்திரங்களுக்கு செய்த உழைப்பை பயன்படித்திக் கொள்ள இந்தக் கதைக்கு இவரும் அய்யரும். நீலிப் பித்தம் தெளிந்த இவர் விரைவிலேயே இஞ்சினியர் மேனனின் புணர்தல் உணர்வு கூடிப்போன, பின்புறம் தடித்த, பெண்டாட்டிக்கு சைபால் மருந்தாக மாறுவதுடன் கதை முடிகின்றது. கதையின் கடைசி டிவிஸ்டாக மேனன் பெண்டாட்டியுடன் கூடும் பொழுது இவருக்கு எல்லா பெண் கதா முகங்களும் இவர் அம்மா முகம் முதற்கொண்டு( நீலி முகம் கூட?) வருகின்றது ஆனால் மாமி முகம் வரவேயில்லை. முன்பு ஒருமுறை கைமைதுனம் செய்யும் போது நீலி முகம் வருவதில்லைஎன்று அய்யரிடம் காதலின் உறுதி பற்றிச் சொன்னவருக்கு, உண்மையிலேயே மாமி தான் நீலியோ?
இந்தக் கதையில் வரும் யானைகூட மனப் பிறழ்வுடன் வருவதாக காட்சியமைப்புகளில் , ஒழுங்காக கடைசிவரை இருந்த தோற்றம் ஒரு மிளாவிற்கும் ஒரு தேவாங்கிற்கும் தான்.( ஆமாம் மிளா என்றால் என்ன?) அந்த தேவாங்கையும் ஒரு புலி தின்னுவிடுகின்றது. காட்டையும் காட்டின் அழிவைப் பற்றிய ஒரு கவலையும் இந்த கதை ஊற்றாததற்கு காடு இந்து மதத்திற்கு அல்லது சனாதன மதத்திற்கு உருவகமாக காட்டப்பட்டது என்பதால் தான் போலும். அந்த அளவில் இந்தக் கதை என்னைப் பொறுத்த அளவில் படுதோல்விதான்.

கதையைப் படிக்கும் எந்தவொரு சனாதன மத வலது சாரிகளுக்கும் இந்தக் கதை சிறப்பான கதை தான். எனக்கும் இதைப் படித்தவரை ஒரு மகிழ்ச்சி தான். இனி ஜெமோவை தவிர்ப்பதால்எந்த ஒரு சங்கடமும், அது ரோசாவசந்தே சொன்னாலும் வராது.


மேலும் படிக்க