Saturday, April 25, 2009

புரட்டிவிடும் புள்ளிகள் - Tipping Points - மால்கம் கிளாட்வெல் புத்தகப் பார்வை.

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்ட அனைவருக்குமான விலங்கியல் / அனைவருக்குமான இயற்பியல் போன்ற ஒரே துறையைப் பற்றி புதிது புதினா செய்திகளைத் தொகுத்து வந்த புத்தஙகங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கிப் படித்ததுண்டு. மாடு தின்பது உண்மையிலேயே வைக்கோல் தானா? என்னும் கேள்வி வந்த அனைவருக்குமான விலங்கியல் புத்தகம் இன்னமும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சர்யம் தான். அதைத் தமிழில் படித்திருந்தது தான் அது ஞாபக அடுக்குகளில் ஒட்டியிருக்கின்றது போல ஒரு தேற்றம் இப்பொழுது. சோவியத் யூனியன் விழ்ந்ததில் நான் அடைந்த சோகம் இந்த வகைப் புத்தகங்கள் மீதான இழப்புத் தான். அதே வகைகளில் இபொழுது மனோதத்துவம், பொருளாதரம், சமூகவியல், வரலாறு, புள்ளியியல் என பல இயல்களை அனைவருக்குமாக கலந்து கட்டி சின்னச் சின்ன விடயங்களை, வேறு புது கோணத்தில் காட்டி எழுதும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் புகழடைந்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன் தாறுமாறுளாதரம் ( :-) Freakonomics), உலகம் தட்டை தான் (The world is flat) என்னும் புத்தகங்கள் மக்களாதரவை அடைந்திருந்த சமயத்தில், கும்பலோடு கும்பலாக வாங்கிப் படித்ததில் இந்த வகைப் புத்தகங்கள் மீதான ஒரு ஆவல் தொடங்கியது.
அப்பொழுது தவற விட்டிருந்த புத்தகம் தான் இது - புரட்டிவிடும் புள்ளிகள். இதனுடைய ஆசிரியர் மால்கம் கிளாட்வெல். இந்த புத்தகத்தைத் தவிர மேலும் இரண்டு புத்தகங்களை எழுதி அவைகளும் நல்ல ஆதரவை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்ல வெள்ளை அட்டையில் ஒரு சிறு தீக்குச்சியின் படத்துடன் ஆப்பிள் குழுவினரின் வெளியீடு போல இருக்கும் இந்தப் புத்தகம் எளிமையான நடையில் எழுதப் பட்டிருக்கின்றது. எந்த ஒரு, கொள்ளை நோய் போல, துரிதமாகவும் பரவவும் கூடிய விடயங்களை (நல்லவற்றிர்க்கும் கெட்டவற்றிர்க்கும்) ஏற்படுத்தக் கூடியவைகளை மூன்று வகைளாக வகைப்படுத்தலாம் அவை - , மிகக் குறைந்த அளவிலான ஆனால் செறிவூக்கமும் செயலூக்கமும் கொண்ட நபர்கள் - ஆழமாக ஒட்டக் கூடிய செய்தி - தோதுவான சூழல். இந்த மூன்றையும் சரிவரக் கையாளத் தெரிந்தால் எந்த ஒன்றையும் - தொழிலாக, புரட்சியாக, நோயாக, நோய்கூறாக எதுவாக இருந்தாலும், அதை எளிமையாக பரவலாக்கலாம் என்பது தான் புத்தகம் சொல்லும் செய்தி. ஒரு கட்டுரைக்குள் முடிக்கக் கூடிய விடயமாக இருந்தாலும் (முதலில் இது கட்டுரையாகத் தான் வந்ததாம்), ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான உதாரணங்கள், ஆராய்சிகளின் தொடர்புகள் என ஆச்சர்யப் படக்கூடிய துணுக்குகளை அடுக்கியிருந்தார். பல துணுக்குகளின் பின்னால் உள்ளது மறுதலிக்க இயலாதது.

சில துணுக்குகள் என்னை துணுக்குற வைத்தன என்றால் மிகையில்லை. அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு தூண்டுகோலாக, போஸ்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியை காட்டி, அதை ஆரம்பித்து நடத்திவைத்தவர்களாக ஒரு மூன்று பேரைச் சுட்டுகின்றார். அந்த மூவரில் பால் ரெவெர்(paul revere) என்னும் ஒருவரின் மக்கள் தொடர்பு நிபுனத்துவத்தின் அளவு தான் விவசாயிகளையும் மற்றவர்களையும் ஒன்றினைத்து, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து நிற்க முடிந்தது. அப்படி நிற்க முடிந்ததே பின்னால் சுதந்திரப் போருக்கான ஆதார வித்து எனவும் நிறுவுகின்றார். ஆராய்ந்து பார்த்தால் பல போராட்டங்கள் இப்படித்தான். பல போராட்டங்கள், முளைவிடாமலே கருகி விடுவதும் இந்த மாதிரி ஆட்களின் போதாமையே. ஒரே மொழி பேசும் இனம் இரண்டு நாடுகளில். ஓரு நாட்டில் இருக்கும் அந்த மக்கள் அழித்தெடுக்கப் படுகின்றார்கள். இன்னொரு நாட்டில் இருக்கும் அதே மக்கள் விளையாட்டுப் போட்டிகளின்ன் வெற்றித் தோல்விகளில் முழ்கியிருக்கின்றார்கள். என்னைப் பொருத்தவரை பால் ரெவேர் போன்ற ஆட்களின் போதாமை ஒரு முக்கிய காரணம்.புரட்டிவிடும் புள்ளிகள் இல்லா கள்ளி நிலமாகத் தான் அந்தக் களம் இருக்கின்றது. 4 அல்லது 5 கோடி புண்னாக்க்குகளும் அதன் மேல் பூஞ்ச காளான்களாக 20-25 லட்சம் காளான்களும் இருக்கும் களத்தில் அதை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் தான்

எனக்குக் கணிதத்தில் வரும் சில எண்கள் மேல் ஒரு விருப்பம் . பை எண் (Phi), படியேற்றம் (exponential) போன்ற எண்கள் கொடுக்கும் நிச்சயம், இந்த நிச்சயமற்ற உலகில், வசீகரிக்த்தான் செய்யும். அதே போல எண்கள், மனிதக் குறியீடுகளிலும் அங்கங்கே மறைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்த எண்களை கொடுக்கும் எல்லா செய்திகளையும் அதிகம் நோண்டிப்பார்க்காமல் அங்கீகரித்தும் விடும் என் மனது. இந்தப் புத்தகமும் சில எண்களை விட்டெறிந்திருந்தது. ஏழு என்ணும் வசீகர எண். சராசரி மனித மனம், ஒரு எழு வகை வித்தியாசங்களை உணர முடியும். அதற்கு மேல் உள்ள வித்தியாசங்கள், பிறழத் தொடங்கி விடும். நூற்றி ஐம்பது என்னும் வசீகர எண். இந்தளவு உள்ள மக்கள், எந்த விடயத்தில் இறங்கினாலும், முயற்சித்தால் எளிதாக ஒத்திசைந்து இயங்க முடியும். இதற்கு மேல் கூடத் தொடங்கினால் அந்த ஒத்திசைவு கெடத் தொடங்கிவிடும். இவைகளை சில பல உதாரணங்கள் , பேட்டிகள் என நிறுவுகின்றார். இந்த எண்களை என் மனது அதிகம் ஆராயாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. ம்ம்ம் என்ன செய்ய

உடைந்த கண்ணாடி ஜன்னல் என்னும் ஒரு கோட்பாடு. இது சூழலைச் சார்ந்தது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு நியுயார்க்கில் 90களில் நிகழ்ந்த தீயச் செயல்கள் குறைப்பு ந்கழ்சியை விளக்குகின்றார். நான் இயற்கை vs சூழல் வகை அரசியல் பிரிவுகளில் சூழல் பின் நிற்பவன். எனக்கு இதனை ஏற்பதில் சிரமம் இல்லை. வேறு இடங்களில் ஆசிரியரே இயற்கை மட்டுமே இல்லை கூடவே சூழல் மட்டுமே இல்லை என குழந்தைகள் வளர்ப்பு பற்றிச் சொல்லும் போது அதன் உண்மையும் உறைக்காமலும் இல்லை.

இந்தப் புத்தகம் அதன் கடைசி பகுதிகளில், அதன் முதலில் இருந்த வேகத்தை இழந்தாலும், ஒட்டு மொத்தமாக படிக்கையில் ஒரு புதிய பார்வையைத் தரும் என உறுதியாகச் சொல்லலாம்.

மேலும் படிக்க